மன்னிச்சுடுங்க டீச்சர்!

பள்ளியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சிக்காக வந்திருந்த பெற்றோர்கள் ஆசிரியர்களை மொய்த்துக் கிடந்தனர். நான் சிந்துவைத் தேடினேன். 4C வகுப்பு எங்கே என்று கேட்டுச் சென்றடைந்த போது சிந்து என்னைக் கண்டு ஓடிவந்து சிரித்தாள். அவளை அழைத்துக் கொண்டு அவளுடைய வகுப்பாசிரியர் யார் என்று கேட்டு அவரைச் சந்திக்க விரைந்தேன். வகுப்பாசிரியருக்குச் சுமார் நாற்பது வயதிருக்கும். என்னைப்பார்த்ததும் ‘சிந்துவின் அப்பா வரலையா’? என்றார். ‘இல்லை. நான் அவருடைய தம்பிதான். அண்ணன் வெளியூரில் இருப்பதால் வரமுடியவில்லை. தப்பா எடுத்துக்காதீங்க சார்’ என்றேன். ‘சரி சிந்து இங்கிலிஷ்ல மட்டும் கொஞ்சம் வீக்கா இருக்கா நீங்க அவ இங்கிலிஷ் டீச்சர் போய் பாருங்க. அடுத்த கூட்டத்துக்காவது அவங்க அப்பாவ வரச் சொல்லுங்க’ என்றார். சிந்துவிடம் ‘உங்க இங்கிலீஸ் டீச்சர் யாரு?’ என்றேன். ‘வாங்க சித்தப்பா நான் கூட்டிட்டு போறேன். அவங்க ரொம்ப நல்ல மிஸ்’ என்று கூட்டிக் கொண்டு சென்றாள். ஸ்டாப் ரூமில் சில ஆசிரியைகள் பெற்றோருடன் பேசிக் கொண்டிருந்தார். ‘அவங்கதான் எங்க இங்கிலீஸ் மிஸ். மாலதி டீச்சர்’ என்று சிந்து க...